தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, அதன் மூலம் பாலிவுட் வரை சென்றவர் இயக்குனர் அட்லி. ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர், அதில் கிடைத்த வரவேற்பு மூலம் இயக்குனர் ஷங்கரின் கவனத்தைப் பெற்றார். பிறகு எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெற்றது. காட்சிகளோடு ஒட்டிய திரைக்கதை, அழுத்தமான காதல் சீன்கள், சந்தானத்தின் தெறிக்கும் நகைச்சுவை என அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்ததால் ராஜா ராணியை இளைஞர்கள் கொண்டாட, முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் அட்லி.
இதன்பிறகு விஜய் உடன் இணைந்த இயக்குனர், தெறி படத்தை இயக்கினார். இதுவும் மாஸ் ஹிட் அடிக்க, அட்லியின் வெற்றி பாதை தொடர்ந்தது. ஆனால் அதே சமயம், அவர் பழைய படங்களை அப்படியே காப்பி அடிப்பதாக ஒரு தரப்பினர் கூற ஆரம்பித்தனர். மௌன ராகம் கதையை அப்படியே சுட்டு, ராஜா ராணி எடுத்ததாகவும், சத்ரியன் படத்தின் கதை கருவை எடுத்து, தெறி படத்தை இயக்கியிருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது.

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத இயக்குனர் அட்லி, விஜயை வைத்து மெர்சல் திரைப்படத்தை இயக்கினார். முதல் முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களின் நடிக்க, இந்தத் திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. ஆனால் இதுவும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்தே காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக சிலர் கூறினர். இதனால் இணையத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானார் அட்லி.
இது ஒரு பக்கம் இருக்க, மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அட்லி, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு, ஷாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை அட்லி இயக்கி முடித்துள்ளார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்த மாதம் ஏழாம் தேதி ஜவான் திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புதிய தகவலாக, ஜவானில் தளபதி விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நிமிடம் மட்டும் விஜய் வருவது போல் இயக்குனர் அட்லி காட்சி அமைத்திருக்கிறாராம். அதேசமயம் தனது முந்தைய திரைப்படங்களில் உள்ள விஜய்யின் கேரக்டரையே இதில் அட்லி கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் இது அட்லியின் சினிமா யூனிவர்சா என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம், படத்தைதான் காப்பியடிக்கிறார் என்றால், லோகேஷ் கனகராஜ் எல் சி யூ திட்டத்தையும் இவர் காப்பியடிப்பதா என சிலர் கூறி வருகின்றனர்.





