வழக்கமாக முன்னணி நடிகர் நடிகைகளில் மகன்கள் அல்லது மகள்கள் சினிமாவில் நடிக்க தான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி தான் பலர் வாரிசு நடிகர்களாக தமிழ் சினிமாவில் வந்து ஜெயித்திருக்கின்றனர். நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் இருந்து பிரபு விக்ரம் பிரபு என 3 தலைமுறை நடிகர்கள் தொடர்கின்றனர்.
அதே போல் நடிகர் முத்துராமன் வீட்டில் இருந்து கார்த்திக் கெளதம் கார்த்திக் என 3 தலைமுறை நடிகர்கள் தொடர்கின்றனர். நடிகர் நாகேஷ் வீட்டில் இருந்து ஆனந்தபாபுவை தொடர்ந்து அவரது மகனும் நடிக்க வந்து விட்டார். நடிகர் கமலின் மகள்கள் ஸ்ருதிஹாசன் அக்சராஹாசன் கூட படங்களில் நடித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருமே நடிப்பில் ஆர்வம் காட்டாமல் டைரக்டர் ஆக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல் தான் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயும் இளம் வாலிபராக இருந்தும் நடிகராக விரும்பாமல் டைரக்டராகி இருக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் ஹீரோவாக அவர் மாற அதிக வாய்ப்புள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் 3 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதில் அவரது அப்போதைய கணவர் தனுஷ் கதாநாயகனாகவும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றது.
இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் 3 படத்தில் தான் நடிகர் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றார். 3 படத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை மற்றும் லால் சலாம் என படங்களை இயக்கினார். இந்த 2 படங்களுமே பலத்த தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 4வது படத்தை டைரக்ட் செய்கிறார். துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படம். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு டெக்ஸ்லா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் டீசர் வெளியானது. தமிழில் இசையமைப்பாளர் அனிருத் டெக்ஸ்லா டீசரை வெளியிட்டுள்ளார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது.





