ரஜினி கமல், விஜய் அஜீத்குமார் போல அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி நடிகர்களாக இருந்த காலகட்டத்தில் அவர்களது ரசிகர்களுக்குள் கடும் போட்டி இருந்தது. சினிமாவில் அவர்களை போட்டியாளர்களாக ரசிகர்கள் கருதினாலும் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருவரும் நெருக்கமான நண்பர்கள். பல வேளைகளில் எம்ஜிஆர், அன்னை இல்லத்தில் தான் உணவருந்துவார்.
அதே போல் ராமாவரம் தோட்டத்தில் சத்யா இல்லத்தில் தயார் செய்யப்படும் சிறப்பு உணவுகள் அன்னை இல்லத்துக்கு சிவாஜி கணேசன் சாப்பிட அனுப்பி வைக்கப்படும். அப்படி ஒரு சகோதர பாசத்துடன் எம்ஜிஆர் சிவாஜி இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல. சினிமாவில் அரசியலில் மாறுபட்டு இருந்தாலும் நல்ல நண்பர்களாக எம்ஜிஆர் சிவாஜி இருந்தார்கள்.
அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் எப்போது எம்ஜிஆர் சிவாஜி கணேசன் குறித்த எதிர்மறை எண்ணங்களுடன் அவர்கள் படங்கள் ரிலீஸாகும்போது போட்டி போட்டுக்கொண்டனர். தியேட்டர்களுக்கு வெளியே சண்டையிட்டு கொண்டனர். எம்ஜிஆரா சிவாஜியா யார் சிறந்த நடிகர் என்ற போட்டி கடைசி வரை இருந்தது.
இதற்கிடையே மறைந்த கவிஞர் வாலி, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசியிருக்கிறார். கவிஞர் வாலி கூறியதாவது, ஒருமுறை நாடகம் பார்க்க நானும் எம்ஜிஆரும் முன்வரிசையில் அருகருகே உட்கார்ந்திருக்கிறோம். நாடக மேடையில் சிவாஜியும் அசோகனும் பிரமாதமாக நடித்துக்கொண்டு இருந்தனர்.
நான் உணர்ச்சிவசப்பட்டு சிவாஜி மாதிரி ஒரு நடிகனே இல்லேண்ணே, நீங்க என்ன சொல்றீங்க என்று எம்ஜிஆரிடமே கேட்டு விட்டேன். யாருமே இப்படி அறிவில்லாமல் ஒரு கேள்வியை எம்ஜிஆரிடம் கேட்க மாட்டாங்க. யாருக்காக இருந்தாலும் அது சங்கடமாக இருக்கும். ஆனா எம்ஜிஆர் அப்படி எடுத்துக்கலே. ஆமாமா சிவாஜி கணேசன் நடிப்பு அவர் செய்றது எல்லாமே பிரமாதம்.
ஆனா சிவாஜி மாதிரி ஒருத்தரை இணையாக சொல்ல முடியாது என்றாலும் சிவாஜிக்கு அடுத்த இடத்துல ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என்று முத்துராமன் பெயரை சொன்னார் எம்ஜிஆர். அப்போது வெளிய வரும்போது எட்மண்ட் என்கிட்ட சொன்னார். என்னங்க நீங்க, எம்ஜிஆர் கிட்டயே தைரியமா சிவாஜியை புகழ்றீங்க என்று கேட்டதாக கவிஞர் வாலி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





