நடிகை நயன்தாரா, மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். ஐயா படம்தான் அவரது முதல் படம். இயக்குநர் ஹரி இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் பாடலில் அழகான நடனமாடி, ரசிகர்களை வசீகரித்தார்.
தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தன. இதில் நடிகர் சிலம்பரசனுடன் வல்லவன் மிக கவர்ச்சியாக நடித்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார். தவிர கஜினி, ஈ படங்களில் நயன்தாராவின் கவர்ச்சி நடனம், மேலும் அவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கி தந்தது.
முதலில் சிலம்பரசன்- நயன்தாரா காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காதல் முறிவடைந்த நிலையில், பிரபுதேவாவுடன் நயன்தாரா இணைத்து பேசப்பட்டார். குறிப்பாக வில்லு படத்தில் விஜய், நயன்தாரா நடித்த கால கட்டத்தில், பிரபுதேவா நயன்தாரா குறித்த கிசுகிசுக்கள் அதிகமானது.
சிலம்பரசனை தொடர்ந்து, பிரபுதேவாவுடன் காதல் உறவை முறித்துக்கொண்ட நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு திருமணமும் செய்துக்கொண்டு, வாடகைத்தாய் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையிலும் தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்றுவரும் நயன்தாரா, தனது சம்பளத்தை ரூ. 10 கோடியில் இருந்து இப்போது ரூ. 12 கோடியாக உயர்த்தி விட்டார். ஆனால், முன்னமே ஒப்பந்தம் செய்த அன்னபூரணி படத்துக்கு நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி.
இந்த அன்னபூரணி படத்தில் ஹீரோக நடிப்பவர் நடிகர் ஜெய். பல ஆண்டுகளுக்கு முன்பு அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்த ஜெய், இந்த படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதில் கதாநாயகன் ஜெய் சம்பளம் ரூ. 75 லட்சம் தான். வழக்கமாக மற்ற படங்களில் ஹீரோ சம்பளம்தான், ஹீரோயினை விட பலமடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் அன்னபூரணி படத்தில் அப்படியே உல்டாவாக மாறி இருக்கிறது.





