திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துக்கொண்டு திமுக அரசின் ஆட்சி குறித்து ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் உங்கள் கனவுகளை சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன் என்று சொல்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். கிடைக்குமா? அவரை கல்யாணம் செய்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அதை செய்ய முடியுமா? என்னுடைய கனவை அவர் நிறைவேற்றுவாரா என்று கிண்டலாக பேசியிருந்தார்.
அரசியல் மேடையில் நடிகை நயன்தாரா குறித்து நாகரிகமற்ற முறையில் சிவி சண்முகம் பேசியதற்காக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் சிவி சண்முகத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். ஆனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சபை நாகரீகத்தை விட்டொழித்து சகோதரி நயன்தாரா குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரீகம்? இதை தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?
இதை தான் உங்கள் தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? தங்களிடம் இருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் நடிகைகளை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கிற உத்தரவாதமும் தரவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனது பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டு விட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் சொல்ல வந்த கருத்து வேறு. ஆனால் தவறுதலாக அவரது பெயர் பயன்படுத்தப்பட்டு விட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.





