தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகராக மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். படத்தில் மட்டுமல்லாமல் திரையுலகிற்கு வெளியேயும் ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனம் பெற அவர் செய்யும் கோமாளித்தனங்கள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் ஆக்கிரமிக்கும்.
தனது மகனைக் குறித்து வெளிப்படையாக பேசுவது, வெள்ளத்தில் படகை ஓட்டிக்கொண்டே பாட்டு பாடி செல்வது என மன்சூர் அளித்த லூட்டியை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பேட்டியில், மரத்தின் இலைகளை படித்து அவர் தின்பதை பார்த்து அனைவரும் வியந்து போயினர். இப்படிக்கு தப்பாக எதையாவது ஒன்றை செய்து கொண்டு மன்சூர் அலிகான் இணையத்தில் பேசு பொருளாக மாறுவார்.
இப்படித்தான் அண்மையில் திரிஷா குறித்து பேசி சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டார். கடைசிவரையும் லியோ திரைப்படத்தில் திரிஷா உடனான ஒரு காட்சி கூட தனக்கு இடம்பெறவில்லை என்பதை சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் அவர் பேசியிருந்தார். மன்சூரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானது.
அவருக்கு நடிகை திரிஷா மட்டுமின்றி, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கூறிய விஷயமே வேறு என்று பல்டி அடித்தார் மன்சூர் அலிகான். தன்னை திரிஷா அவதூறு செய்து விட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடுத்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை முடித்து வைத்தது. இப்படியான சூழலில், தற்போது அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவரும் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும்போது, திரிஷாவை 25 லட்ச ரூபாய் கொடுத்து வரவழைத்ததாக அவர் கூறியிருந்தார்.
அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று திரிஷா கூறியிருக்கிறார். இப்படியான சூழலில் நடிகைக்கு ஆதரவு தெரிவித்து மன்சூர் அலிகான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அருவருக்கத்தக்க வகையில் திரையுலக சகோதரிகளை, அரசியல்வாதி ஒருவர் பேசி இருக்கிறார். அவதூறாக பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார்.





