தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்ற முனைப்போடு உள்ள சில படைப்பாளிகளில் இயக்குனர் சமுத்திரக்கனி மிக முக்கியமானவர். ஒரு திரைப்படத்தை ஜனரஞ்சகமாக தருவது மட்டுமின்றி அதில் சமுதாய விழிப்புணர்வை கொண்டு வந்து தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
இயக்குனர் ராம் சக்ரி இயக்கத்தில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் பாத்வே புரடக்சன்ஸ் சார்பில் உருவான படம் கார்மேனி செல்வம். இந்த படத்தில் சமுத்திரக்கனி கௌதம் வாசுதேவ் மேனன் அபிநயா லட்சுமி பிரியா சந்திரமௌலி கார்த்திக் குமார் படவா கோபி மதுமிதா அர்ஜூனன் கோதண்டம் கரண் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
கார்மேனி செல்வம் படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது, நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.
இப்படி இருப்பவர்கள் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள் தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோசமானவர்கள். இதை நான் சொல்ல வருவது தான் இந்த கார்மேனி செல்வம் படைப்பு.
பணக்காரன் வேறு செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்த படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம். கார்மேனி செல்வம் சாதாரண திரைப்படம் அல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.
நீங்கள் நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இஎம்ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்க கூட முடியாது. அந்த சுமையை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்துவிட்டு கைவீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். அப்போது நிறைய மகிழ்ச்சியை பார்ப்பீர்கள் என்று இயக்குனர் சமுத்திரக்கனி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





