நடிகர் விஜய் நடிப்பில், இந்த மாதம் 5ம் தேதி வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இன்று 25வது நாளை இந்த படம் நிறைவு செய்துள்ளது. இந்த விஷயத்தை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுவரை உலகம் முழுவதும் தி கோட் படம் 440 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
ஆனால் கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்துடன் ஒப்பிடும்போது லியோ படம் 585 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. தி கோட் படத்தின் வசூல் 440 கோடி ரூபாய் என்பதால் 145 கோடி ரூபாய் வரை வசூலில் குறைந்துள்ளது. எனினும் தி கோட் படத்தை பொறுத்தவரை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இது பெரிய லாபம் தான் என்று கூறப்படுகிறது.
தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ், நடிகைகள் சிம்ரன், சமந்தா, மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே போன்றவர்களும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 69 படத்தில் சமந்தா நடித்தாலும் படத்தில் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும், மமீதா பைஜூ விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சிம்ரன், சமந்தா, மோகன்லால் போன்றவர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். கில்லி, போக்கிரி, சிவகாசி, வாரிசு உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிகை மஞ்சுவாரியார் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகையான இவர் தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளிவர உள்ள வேட்டையன் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மஞ்சு பேசும்போது, துணிவு படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்தேன். அவருடன் பணியாற்றிய போது, நீங்கள் நடிக்க மற்றொரு படம் தருகிறேன் என்று எச். வினோத் என்னிடம் கூறினார் என்று மஞ்சுவாரியார் கூறியிருக்கிறார். அதனால் தளபதி 69 படத்தில் மஞ்சுவாரியார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வரும் நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





