தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி ராமையா. நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகன். நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை தான் உமாபதி ராமையா காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். கடந்த ஆண்டில் இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது.
இந்நிலையில் உமாபதி ராமையா டிஎன் 2026 என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜ் தம்பி ராமையா எம்எஸ் பாஸ்கர் இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். டிஎன் 2026 என்றால் தமிழ்நாடு 2026 என்று அர்த்தம் அல்ல, தங்க நட்சத்திரம் 2026 என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன் 2026 படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித்தலைவர் தலைவர் விஜயை கிண்டலடித்து மட்டம் தட்டுவது போன்ற காட்சிகளும் வசனங்களும் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் ரசிகர்களும் தவெக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த எம்எல் ரவி என்பவர் இந்த படம் வெளியீட்டுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அரசியல் சார்ந்த சில விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதால் அது நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே தேர்தல் முடியும் வரை டிஎன் 2026 படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தவெக கட்சி தலைவர் நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை வெளியிட அனுமதிக்காத போது டிஎன் 2026 படத்தை வெளியிடுவது சரியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிஎன் 2026 படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த வழக்கு உடனடியாக விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குள் தீர்வு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும் தலைமை தேர்தல் ஆணையர் மாநில தேர்தல் அதிகாரி சென்சார் போர்டுக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்தும் இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படம் ஏற்கனவே சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது. தணிக்கை வாரியம் அனுமதி அளித்த படத்தை நீதிமன்றம் நிறுத்தி வைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால் டிஎன் 2026 படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்ற குழப்பம் நீடிக்கிறது.





