நடிகர் ராமராஜன் கடந்த 1980 90களில் முன்னணி நடிகராக இருந்தவர். பல வெள்ளி விழா படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். குறிப்பாக அவர் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் எங்க ஊரு காவல்காரன் கரகாட்டக்காரன் செண்பகமே செண்பகமே ஊரு விட்டு ஊரு வந்து மனசுக்கேத்த மகராசா தங்கமான ராசா என பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.
அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு இணையாக வசூலை வாரிக்குவித்த படங்கள் ராமராஜன் நடித்த கிராமத்து படங்கள் தான். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக விசுவாசியாக மாறினார். திருச்செந்தூர் தொகுதி எம்பியாகவும் இருந்தார். பிறகு நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ராமராஜனை அதிமுக கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி அவரை அலட்சியப்படுத்தியதால் ராமராஜனும் அதிமுக நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை. இந்த சூழலில் ஆலங்குளம் தொகுதி தவெக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ராமராஜன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து நடிகர் ராமராஜன் கூறியதாவது, இந்த தேர்தல் வித்தியாசமான ஒரு தேர்தல். இதுவரை யாரும் பார்க்காத தேர்தல். நல்லவர்களுக்கு வாக்கு செலுத்தி அடுத்த ஐந்தாண்டுகளை பொற்காலமாக மாற்ற வேண்டும். நான் தவறானவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன். எனது நீண்ட கால குடும்ப நண்பரின் மகன் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்புக்காக அவருக்கு பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான் நடித்து வெளியான படம் சாமானியன். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட யாரும் முன் வராத நிலையில், ஆலங்குளத்தில் டிவிபி குடும்பத்தினர் அவர்களது தியேட்டரில் 130 நாட்கள் ஓட வைத்து வெற்றி படமாக மாற்றினார்கள். அந்த குடும்பத்தினர் முன்பு கேட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அவர்களின் வாரிசான விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.
அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமில்லை. குடும்ப நெருக்கமும் விசுவாசம் தான் முக்கியம். என் நண்பருக்காகவே நான் ஓட்டு கேட்க வந்துள்ளேன். எம்ஜிஆர் மீது கொண்ட மரியாதை என் உயிர் இருக்கும் வரைக்கும் மாறாது என்று நடிகர் ராமராஜன் அப்போது கூறியிருக்கிறார். தவெக கட்சியில் நான் சேரவில்லை. எப்போதும் எம்ஜிஆரின் விசுவாசி நான். நட்புக்காக தவெக கட்சிக்கு ஓட்டு கேட்கிறேன் என்று ராமராஜன் தெளிவாக கூறியிருக்கிறார்.





