நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே மமிதா பைஜூ நரேன் பிரியாமணி கௌதம் மேனன் பாபிதியோல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் குறிப்பிட்ட அந்த நாளில் ரிலீஸ் ஆகவில்லை. சென்சார் பிரச்னை காரணமாக படத்துக்கு சான்றிதழ் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்பட்டது. மேலும் நடிகர் விஜய் இதை தனது கடைசி படம் என அறிவித்த நிலையில், படம் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குரியதாகவும் வசனங்கள் பிரச்னைக்குரியதாக இருப்பதாகவும் சென்சார் தரப்பில் கூறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் டெல்லி உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்ற நிலையில் ஜனநாயகன் படத்துக்கு மேலும் சிக்கல்களே உருவானதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், மும்பையில் ஜனநாயகன் படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து விட்டனர். ஆனால் இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து விலக்கப்பட்ட பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறிவிட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக 2 தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது. முதலில் 5 நிமிட காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்து முழு படமும் தரமான தொழில்நுட்பத்தில் வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓடிடியில் பார்ப்பது போல பலரும் செல்போன்களில் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.
இந்நிலையில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட அமைப்பு சார்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இனியும் தாமதிக்காமல் வரும் 24ம் தேதி, அதாவது சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு அடுத்த நாள் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





