நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன் சென்சார் பிரச்னை காரணமாக இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் 3 மாதங்கள் கடந்தும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இடையே சட்டசபை தேர்தலும் வந்துவிட்டது இந்த படத்துக்கு பெரிய தடையாக மாறி விட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. இது கோலிவுட் வட்டாரத்திலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்திருக்கின்றனர்.
இதில் 3 பேர்தான் முக்கிய குற்றவாளிகள் என்றும் அதில் உதவி எடிட்டர் ஒருவர்தான் இந்த படத்தை திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்து இணையத்தில் கசிய விட்டவர் என்றும் அவர் வேறு ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தை பார்க்கவும் டவுன்லோடு செய்யவும் கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் இருந்து சில காட்சிகள் வீடியோவாக வெளியாக பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எங்கள் திருட்டு தடுப்புக் குழு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த காணொளிகளை பகிர்வதிலோ விளம்பரப்படுத்துவதோ ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காணொளிகளை பகிர்வது மற்றும் டவுன்லோட் செய்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது.





