தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இப்போது பாஜக கட்சியில் மாநில துணைத் தலைவராக குஷ்பு இருக்கிறார். முதலில் திமுகவில் இணைந்த அவர் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். இப்போது பாஜகவில் இருந்து வருகிறார். கடந்த முறை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.
அதே நேரத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் குஷ்புவின் கணவர் இயக்குனர் சுந்தர் சி இந்த முறை தேர்தல் களத்தில் நிற்கிறார். மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அங்கு சுந்தர் சி, திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
தனது கணவர் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளரான சுந்தர் சிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு மதுரை மத்திய தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி குறித்து திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில், கூத்தாடி என்று விமர்சித்து வருகின்றனர். குஷ்புவையும் கூத்தாடி என்று விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது, என்னையும் என் கணவரையும் கூத்தாடி என்று விமர்சிக்கும் திமுகவினர் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி போன்றவர்களை பற்றி நினைத்து பேச வேண்டும். அவர்களும் சினிமா துறை சார்ந்தவர்களாக இருந்தவர்கள்தான். உதயநிதி பல படங்களில் நடித்தவர்தான்.
எங்களை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள், திமுக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கமல்ஹாசனையும் சத்யராஜையும் பிரகாஷ் ராஜையும் ஏன் வரவழைத்து பேச வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நடிகர்கள் இல்லையா? அவர்கள் கூத்தாடிகள் இல்லையா? உங்கள் கட்சி வேட்பாளர்களுக்கே ஆதரவு திரட்ட அந்த கூத்தாடிகள் தானே தேவைப்படுகின்றனர்?
சுந்தர் சி எப்படி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார், அவருக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து கேள்வி எழுப்பிய பிரகாஷ் ராஜ், அவர் கர்நாடகாவில் போட்டியிட்டு தேர்தலில் டிபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போனது ஏன் என்று அந்த கேள்விக்கு யோசித்து பதில் சொல்லட்டும். அப்புறம் சுந்தர் சிக்கு எப்படி வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பேசலாம் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக பேசியிருக்கிறார்.





