அமரன் திரைப்படத்தின் மகத்தான வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஒரு மார்க்கெட்டை உண்டு பண்ணி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் படம் என்றால் அது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று சினிமா விநியோகஸ்தர்கள் கருதி வருகின்றனர். அதற்கு ஏற்றது போலவே அவரும் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.
இருப்பினும் அவருக்கு பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை கொடுத்தது. அந்தத் தோல்வியால் கடும் விமர்சனத்திற்கும் சிவகார்த்திகேயன் ஆளானார். இப்படியான சூழலில்தான் ராஜ்குமார் பெரியசாமி உடன் அவர் இணைந்து கொடுத்த அமரன் திரைப்படம், திருப்புமுனையை கொடுத்தது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து, தனது 25வது திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக இருந்த, புறநானூறு படத்தைதான் அவர் கைப்பற்றினார். முதலில் அந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இதற்கான பணிகள் நின்று போக, சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் உள்ளே வந்தார். இதன் பிறகு, ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா ஆகியோரும் இடம் பெற்றனர். படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து காரைக்குடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினார்கள். இலங்கையிலும் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடைபெறும்போது, படத்திற்கு பட்ஜெட்டில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இதனால் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினார்கள்.
இப்படி இருக்க சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுதா கொங்கரா, பராசக்தி படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், இன்னும் 40 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது மதராசி படப்பிடிப்புக்கு சென்று விட்டார். அதன் பிறகு இதற்கான படப்பிடிப்பு தொடங்கும். படத்தின் ரிலீஸ் தேதியை நான் மட்டும் சொல்ல முடியாது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து முடிவு செய்ய வேண்டும். விஜயின் ஜனநாயகனுடன் பராசக்தி ரிலீஸ் செய்யப்படும் என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.





