நடிகர் ராஜ்கிரண் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக அப்பா கேரக்டர் தாத்தா கேரக்டர் என்றாலே ராஜ்கிரண்தான் முதலில் இயக்குனர்களின் தேர்வாக இருக்கிறார். அந்தளவுக்கு அவரது முதிர்ச்சியான பக்குவப்பட்ட நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
என் ராசாவின் மனசிலே படம் தான் ராஜ்கிரண் நடிகரான அறிமுகமான முதல் படம். இந்த படத்தின் கதாநாயகனும் அவர்தான். இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தான் நடிகை மீனா நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் வேறு யாருமல்ல, ராஜ்கிரண்தான்.
ராஜ்கிரணின் உண்மையான பெயர் காதர் மொய்தீன். இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தவர். 16 வயதினிலே கரகாட்டக்காரன் போன்ற பல படங்களை தமிழ்நாடு முழுவதும் ரிஸ்க் எடுத்து வினியோகம் செய்தவரும் இவர்தான். ஏனெனில் முதலில் இந்த படங்களை பார்த்தவர்கள் படத்தை விலை கொடுத்து வாங்க தயங்கிய நிலையில் தயாரிப்பாளர் ராஜ்கிரண் முன்வந்திருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே படம்தான் ராஜ்கிரண் நடித்த முதல் படம் என்று ரசிகர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. அதற்கு முன்பே ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பெயர் என்னை பெத்த ராசா. ஹீரோவாக ராமராஜன் ஹீரோயினாக ரூபிணி மற்றும் கவுண்டமணி செந்தில் ஸ்ரீவித்யா வினுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் கதை திரைக்கதையை எழுதி இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டவர் ராஜ்கிரண்தான். ஆனால் இந்த ஹீரோ கேரக்டரில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்காது. முரட்டுத்தனமான உங்கள் தோற்றத்தை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று சொன்னதால் ராஜ்கிரணுக்கு பதிலாக ராமராஜன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.
ஆனால் இந்த படத்தில் ஜானி என்ற கேரக்டரில் கருப்பு பேண்ட் கருப்பு சட்டை கெட்டப்பில் கழுத்தில் சிலுவை அணிந்து ராஜ்கிரண் நடித்திருப்பார். வில்லன் வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் அவர்தான் கடைசியில் வில்லனை கொலை செய்து ஹீரோவை காப்பாற்றிவிட்டு இறந்துவிடுவார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கிரண்தான். இந்த படத்தை சிராஜ் டைரக்ட் செய்திருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். ராமராஜனின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.





