தமிழில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த இந்தி படம் ஜவான் என்கிற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். திருமணத்துக்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை இயக்கியவர் வம்சி. அவர் இப்போது இந்தியில் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக சல்மான்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படப்பிடிப்பு தொடங்கி மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால்தான் நடிகை நயன்தாரா கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் ஓட்டுப்போட வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா தரப்பில் ஓட்டுப் போட படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனரிடம் கேட்கவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை கேட்டிருந்தால் நடிகை நயன்தாராவுக்கு 2 நாட்கள் கால அவகாசம் தர இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் நயன்தாராவுக்கு தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட ஆர்வமும் அக்கறையும் இல்லாததால் அவரே அதை தவிர்த்து விட்டார் என்றும் அவர் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அன்று ஓட்டுப் போடாமல் தவிர்த்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சல்மான்கான் நடிகை நயன்தாரா இணைந்து நடித்து வரும் இந்த இந்தி படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் மற்றொரு ஆச்சரியமான தகவலாக இந்த படத்துக்கு 4 இசையமைப்பாளர்கள் இசையமைக்க கமிட் செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழில் இருந்து அனிருத் மற்றும் தமன் என்றும் வட இந்தியாவில் இருந்து 2 இசையமைப்பாளர்கள் என்றும் கூறுகின்றனர்.
வழக்கமான பான் இந்தியா படம் என்றால் நடிகர்கள்தான் மொழிக்கு ஒருவர் என 4 பேர் அல்லது 5 பேர் இருப்பார்கள். அல்லது நடிகைகள் மொழிக்கு ஒருவர் வீதம் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள். இது என்ன ஒரே படத்தில் 4 இசையமைப்பாளர்கள் கமிட் செய்யப்பட்டுள்ளனர் என்று சினிமா ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.





