பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மறுதினம் மே 4ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 62 இடங்களில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் இருந்து தொகுதி வாரியாக கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் குறித்த விவரங்களுடன் வெற்றி தோல்வி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மே 4ம் தேதி மதியத்துக்குள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது உறுதியாகி விடும்.
வழக்கமாக அதிமுக அல்லது திமுக என்ற 2 கட்சிகளில் ஒன்றுதான் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கும். கடந்த 1967ம் ஆண்டு முதல் 60 ஆண்டுகளாக அதுதான் நடந்து வருகிறது. ஆனால் இந்த முறை இந்த 2 திராவிட கட்சிகளையும் கடந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் ஆகிய 2 பேருக்கு பிறகு சினிமாவில் இருந்து அரசியல் களத்தில் குதித்த நடிகர்களில் நடிகர் விஜய்க்கு தான் தமிழக மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தனிப்பட்ட முறையில் நடிகர் விஜயின் குடும்ப விவகாரம், விவாகரத்து கேட்ட விஜய் மனைவி சங்கீதா, நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு உள்ள நட்பு, திருமண விழாவுக்கு இருவரும் ஒன்றாக வந்தது, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விட்டு விஜய் தனியாக இருப்பது கரூர் சம்பவம் என பல சிக்கல்கள் பிரச்னைகள் சர்ச்சகைள் இருந்தும் நடிகர் விஜய்க்கு மக்கள் ஆதரவும் குறையவில்லை என்பதை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூட்டம் நிரூபித்திருந்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்படி இருந்தாலும் நாளை மறுதினம் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தான் மக்களின் உண்மையான தீர்ப்பாக நடிகர் விஜயின் அடுத்த கட்ட நகர்வை உறுதியாக தீர்மானிக்கப் போகிறது. அந்த வகையில் அவர் 120க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் தமிழக முதல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் குறைந்த எண்ணிக்கை தொகுதிகளில் வெற்றி பெற்றால், அல்லது அவரது கட்சி பெரிய தோல்வியை சந்தித்தால் மீண்டும் அரசியலில் தொடர்வாரா, அல்லது சினிமாவுக்கு சென்று விடுவாரா, அல்லது அரசியல் சினிமா இரண்டிலும் கவனம் செலுத்துவாரா என்ற குழப்பம் விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மே 4ம் தேதி தான் விஜய் எதிர்கால பயணத்தை தீர்மானிக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





