நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிமுக திமுக என்ற 2 பெரிய ஜாம்பவான் கட்சிகளை தோல்வியடைய செய்து அவர் இராஜ சிம்மாசனத்தில் ஏறி அமர இருக்கிறார்.இந்த வெற்றியை தமிழ் சினிமா துறையினரும் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இதில் நடிகர் சூர்யாவுக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பூந்தோட்டம் எஸ் மேடம் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். மலையாளம் தெலுங்கிலும் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் நடிகர் சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் பிரச்னை இருந்தது. தன்னை திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கண்டபடி விமர்சித்து பலமுறை வீடியோ விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது பெங்களூருவில் தனது அக்காவுடன் விஜயலட்சுமி இருந்து வருகிறார்.
இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, வாழ்த்துகள் விஜய் அண்ணா. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். தவெகவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவர்கள் அளித்த தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்.
நான் சென்னையில் இருந்திருந்தால் நேரில் வந்து விஜய் அண்ணாவை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பேன். என்னையும் தவெக கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் உங்களை போல மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டு இருப்பேன்.
தற்போது என் குடும்பத்தில் என் அக்காவின் உடல்நிலையில் பிரச்சனை இருப்பதால் என்னால் வெளியில் வர முடியவில்லை. இருந்தாலும் மக்களின் நம்பிக்கை வீணாகாமல் நல்லாட்சி வழங்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் தவெக தலைவர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து பேசியிருக்கிறார்.





