சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டு குறைந்த எண்ணிக்கையில் வென்ற நிலையில் தவெக கட்சிக்கு தான் ஆட்சியமைக்க உரிமை உள்ளது.
ஆனால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் தந்தால்தான் விஜயை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்போம் என்று கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு தந்திருப்பதால் முதல்வர் பதவியேற்க விஜய்க்கு இப்போது 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. 5 எம்எல்ஏக்கள் இன்னும் தேவைப்படுகின்றனர்.
தவெக கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்த நிலையில் அடுத்தடுத்த தேர்தல்களிலும் தவெக காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்று முடிவான நிலையில் இது பாஜக கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இப்படி ஒரு நெருக்கடியை விஜய்க்கு தருவதாகவும் தமிழக கட்சிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பல இடங்களில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசினார். அப்போது நடிகனுக்காக விசில் அடிக்கலாம். நாட்டை கொடுக்க முடியுமா என்று விஜய்க்கு எதிரான கருத்துகளை தெரிவித்த அவர் மீதும் விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் இப்போது விஜய்க்கு ஆதரவாக அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது, விஜயை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ அது கொள்கை பிரச்சனை. ஆனால் மக்கள் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். விஜயை ஆட்சி அமைக்க விடுங்கள். அவரை ஏன் நிறுத்துகிறீர்கள்? அவரை நிறுத்துவதற்கான சட்டமே இல்லையே? ஆளுநரின் வீட்டு வாசலில் முடிவாகும் விஷயம் இது கிடையாது.
சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மத்தியில்தான் இது முடிவாக வேண்டிய விஷயம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு குரல் எழுப்பிய நடிகர் பிரகாஷ் ராஜ், அவருக்கு ஆதரவாக தனது கருத்தை இப்போது வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.





