தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகவும் சினிமா கலைஞர்களின் தொழில் பாதுகாப்புக்காகவும் உருவானதுதான் தென்னிந்திய நடிகர் சங்கம். 2000ம் ஆண்டுகளில் நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஜயகாந்த் இருந்த போது, நடிகர் சங்க கடனை அடைக்க பெரிய முயற்சி எடுத்தார். வெளிநாடுகளில் கலை நட்சத்திர இரவுகளை நடத்தி அதன் மூலம் பல கோடி ரூபாய் நடிகர் சங்க கடனை அடைத்தார்.
இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த சங்க கட்டுமான பணிகள் குறித்த பேசிய சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி, 40 கோடி ரூபாய் வரை கடன் பெற்று கட்டுமான பணிகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் எதிர்பாராத இடங்களில் இருந்து எல்லாம் எங்களுக்கு நிதி கிடைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய்க்கு மேல், 50 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் 40 கோடி ரூபாய் நடிகர் சங்கம் கடன் வாங்கணுமா என்ன என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சினிமா கலைஞர்களின் வளர்ச்சிக்காக உள்ள நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவ இப்போதைய திரைக்கலைஞர்கள் முன்வரவில்லையே என்றும் ஆதங்கப்பட்டனர்.
ஏனெனில் இன்றைய நடிகர்கள் நினைத்தால் 4 பேர் ஆளுக்கு ரூ. 10 கோடி என தந்தால் கூட இந்த 40 கோடி ரூபாயை ஒரு நாளில் திரட்டி விட முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த அளவுக்கு நடிகர்களின் சம்பளம் பெரிய அளவில் நூற்றுக்கணக்கான கோடிகளில் இல்லாததால்தான் அன்றைய நடிகர் சங்க் தலைவர் கேப்டன் விஜயகாந்த் வெளிநாடுகளில் கலை நட்சத்திர இரவுகளை நடத்தி பணம் திரட்டி சங்க கடனை அடைத்தார்.
இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் பேசியிருப்பதாவது, தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு பல நடிகர்கள் நிதி கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக கமல்ஹாசன் 2 கோடி ரூபாய் நடிகர் விஜய் 1 கோடி ரூபாய் நடிகர் சூர்யா 1 கோடி ரூபாய் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் என்று பலரும் நிதி உதவி செய்திருக்கின்றனர்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை ஒரு ரூபாய் கூட நடிகர் சங்கத்துக்கு கொடுக்கவில்லை. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்த தமிழ்நாட்டுக்கு நீங்க என்ன திருப்பி கொடுத்தீங்க என்று மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் அந்த நேர்காணலில் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





