தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீமன். குறிப்பாக சேது, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சொக்கத்தங்கம், பஞ்ச தந்திரம், ப்ரண்ட்ஸ், நெஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீமன் நல்ல நடிகராக மட்டுமின்றி சிறந்த நடனக் கலைஞராகவும் இருப்பதால் பல படங்களில் பாடல் காட்சிகளில் ஸ்ரீமன் நடனத்தில் அசத்தியிருக்கிறார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடுகளாக மாறி இருக்கின்றன.
சென்னையில் இன்னும் 2 தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் ரோடுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பல இடங்களில் தேங்கியிருக்கும் மழை தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீமன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலனியில் வசித்து வருகிறார். இவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்னும் அதிகளவில் கனமழை பெய்தால் வீட்டிற்குள் மழை தண்ணீர் வந்துவிடும் ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அபாயத்தை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக நடிகர் ஸ்ரீமன் இந்த வீட்டை காலி செய்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து குடிமாறி நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அவர் ஷிப்ட் ஆகியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஸ்ரீமன், வெள்ள மீட்பு பணிகளை அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. ஆனாலும் இப்போது செய்யும் பணிகளை விட இன்னும் துரிதமாகவும், வேகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும். இங்கு யாரைச் சொல்லியும் குற்றமில்லை. அரசு அவர்களது வேலையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த இடத்தில் இன்னும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த ஆண்டுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீமன்..
சினிமால் கமல், விஜய், அஜீத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் ஸ்ரீமன் போன்ற நடிகர்களுக்கே மழை வெள்ளத்தால் இப்படி ஒரு சூழ்நிலை என்றால், சென்னையில் வாழும் நடுத்தர மற்றும் கீழ் மட்ட மக்களின் குடியிருப்புகளில் சூழ்ந்து இருக்கும் வெள்ளத்தால் அவர்கள் என்ன சிரமத்திற்கு ஆளாவார்களோ என்று பலரும் புலம்பி வருகின்றனர். வழக்கமாக டிசம்பர் மாதம் சந்திக்கும் மழை வெள்ள பாதிப்புகள், அக்டோபர் மாதமே துவங்கி விட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.





