சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இன்று காலை நடந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். தமிழ்நாடு கவர்னர் ஆர்வி அர்லேகர் முதல்வராக விஜய் மற்றும் தவெக கட்சி சார்ந்த 9 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துக்கொண்டார்.
இந்த விழாவில் முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பேசியதாவது, நான் ஒண்ணும் மன்னர் பரம்பரையில் வந்தவன் இல்லை. உங்களை போல நானும் ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்பவன்தான். ஒரு சாதாரண உதவி இயக்குனருக்கு மகனாக பிறந்தவன் நான். எனக்கு பசி என்றால் தெரியும். வறுமை என்றால் தெரியும்.
அரசு கஜானாவை காலி செய்து வைத்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் கஜானாவை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டு போயிருக்கின்றனர். உள்ளே போய் பார்த்தால் தான் எது எது என்னென்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியும். 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து போயிருக்கின்றனர். பெரிய சுமை உள்ள நிலையில்தான் நாம் பொறுப்புக்கு வந்திருக்கிறோம்.
அதனால் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். வாக்குறுதிகளாக தந்த எல்லாவற்றையும் நான் ஒவ்வொன்றாக செய்கிறேன். நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை நான் சொல்ல மாட்டேன். நான் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத விஷயங்களையும் செய்வேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டேன். அது எனக்கு அவசியம் கிடையாது.
அதே நேரத்தில் என்னுடன் இருப்பவர்களும் உண்மையாக நேர்மையாக செயல்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் நான் அதிக கவனம் செலுத்துவேன். இந்த இடத்துக்கு வர நான் நிறைய வலிகளை சந்தித்தேன். நிறைய அவமானங்களை பட்டேன். என்னை போல் நீங்களும் அந்த வலிகளை அவமானங்களை சந்தித்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
நான் வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன என்பது குறித்து முழுமையாக ஒரு வெள்ளை அறிக்கை தரப் போகிறேன். அப்போதுதான் வெளிப்படையான ஆட்சியை நான் இன்று முதல் துவங்க முடியும் என்று முதல்வர் விஜய் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை விடுவதாக முதல்வர் விஜய் கூறியது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.





