தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு நடிகராக இருந்த விஜய் இன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர் வி அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஆனந்த் செங்கோட்டையன் அருண்ராஜ் வெங்கட்ரமணன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக இந்த விழாவில் பதவியேற்றனர்.
இந்த விழாவில் முதல்வர் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா பங்கேற்றனர். நடிகை திரிஷா இந்த விழாவில் கலந்துக்கொண்டார். மேலும் நடிகர்கள் சஞ்சீவ் ஸ்ரீமன் பாடகர் கிரிஷ் நடிகை சங்கீதா ஜெய் மன்சூர் அலிகான் தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி வெங்கட்ரமணா லலித்குமார் அம்மா கிரியேசன்ஸ் சிவா உள்ளிட்டோர் விழாவில் காணப்பட்டனர்.
மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவில்லை. அதே போல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் நாசர் விஷால் கார்த்தி உள்ளிட்ட யாரும் கலந்துக்கொள்ளவில்லை. முக்கிய இயக்குனர்கள் யாரும் விழாவில் தென்படவில்லை.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய் கருப்பு பேண்ட் கருப்பு கோட் வெள்ளை சட்டையில் காணப்பட்டார். பதவியேற்பு விழாவுக்கு பிறகு தலைமை செயலகம் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்கிருந்த அதிகாரிகள் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் சக அமைச்சர்களும் சென்றனர்.
தமிழ் சினிமாவில் இருந்து பலர் அரசியல் கட்சி ஆரம்பித்தனர். பலர் அரசியலில் இணைந்தனர். ஆனால் எம்ஜிஆருக்கு பிறகு அரசியல் கட்சி துவங்கி அதுவும் 2 ஆண்டுகளில் முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்று முதல்வராக பதவியேற்ற ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். நாளை தவெக கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் மீதமுள்ள அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.





