இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தவெக குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். பு
புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர்.
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம்.
இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்.
அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி என்று தமிழக முதல்வர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
இன்று தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது தவெக கட்சிக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தந்த நிலையில் தவெக வெற்றி பெற்றது. இதில் புதிய திருப்பமாக அதிமுக தரப்பில் எஸ்பி வேலுமணி தலைமையிலான ஒரு அணியில் இருந்து 25 எம்எல்ஏக்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தந்ததால் 119 என்ற நிலையில் இருந்து 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.





