தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக பிஎல் தேனப்பன் இருந்து வருகிறார். முத்து படத்தில் ரஜினியும் மீனாவும் கேரளாவில் ஒரு சின்ன ஓட்டலில் சென்று சாப்பிடும் காட்சியில் தேனப்பன் அந்த ஓட்டல் முதலாளியாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக சமீபத்தில் வெளியான சிறை படத்தில் இளம் காதல் ஜோடியை தனது சேம்பர் அறைக்குள் அழைத்து விசாரிக்கும் நீதிபதி கேரக்டரில் நடித்திருந்தது தேனப்பன் தான். போர்த்தொழில் குரங்கு பொம்மை மகாராஜா டிராகன் என பல படங்களில் தேனப்பன் நடிப்பு சில காட்சிகளாக இருந்தாலும் அவரது நடிப்பு நேர்த்தியாக திருத்தமாக இருக்கும்.
திரைப்பட தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர் தேனப்பன். படையப்பா படத்தை ரஜினிகாந்த் தான் சொந்தமாக தயாரித்தார். எனினும் இந்த படத்தின் கோ புரடியூசராக இருந்து படையப்பா படத்தின் மொத்த பட்ஜெட் வரவு செலவு கணக்குகளை எல்லாம் சரியாக கையாண்டவர் தேனப்பன்தான். படையப்பா படத்துக்காக போட்ட பட்ஜெட்டில் கடைசியில் 1.5 கோடி ரூபாய் மிச்சமாக அதை படத்தில் நடித்தவர்கள் படத்துக்காக உழைத்தவர்களுக்கே திருப்பி தருமாறு ரஜினிகாந்த் தேனப்பனிடம் கூறிய தகவலை அவரே ஒருமுறை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற தயாரிப்பாளர் தேனப்பன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 55 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது கேப்டன் விஜயகாந்த் தான். இதுவரை உலகத்தில் எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்தது இல்லை. இதனால் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாழ்க்கை கிடைத்தது.
நடிகர் விஜயகாந்த் கிட்ட இருந்துதான் நான் தைரியம் நேர்மை இதையெல்லாம் கத்துக்கிட்டேன். நான் அவரை வைத்து தயாரித்த முதல் படம் சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அந்த படத்தால் எனக்கு 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நஷ்டத்தை விஜயகாந்த் தானாக முன்வந்து ஏத்துக்கிட்டார்.
அதற்கு பிறகு பூந்தோட்ட காவல்காரன் என்ற விஜயகாந்த் நடித்த படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த படம் 7 லட்சம் ரூபாய் வரை நல்ல லாபம் கொடுத்தது. அந்த பணத்தை அப்படியே விஜயகாந்தும் இப்ராகிம் ராவுத்தரும் என்னிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டனர். அவர்கள் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால் நான் திரும்பவும் ஊருக்கே போய் இருப்பேன் என்று அந்த நேர்காணலில் தயாரிப்பாளர் தேனப்பன் கூறியிருக்கிறார்.





