பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு கருப்பு படம்தான் நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளது. இடையில் அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி படங்களாகவே இருந்தன.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கங்குவா. 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சொல்லப்பட்ட இந்த படம் போட்ட பட்ஜெட்டை திரும்ப எடுக்க முடியாமல் பலத்த நஷ்டத்தை சந்தித்த ஒரு காட்டு மொக்கை படமாக விமர்சிக்கப்பட்டது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கங்குவா படத்தில் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த 15ம் தேதி வெளியான இந்த படம் 2 வாரங்களில் ரூ. 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தை பா ரஞ்சித் இயக்குவாரா, அல்லது அவரது உதவி இயக்குனர்கள் யாராவது இயக்குவார்களா என்பது தெரியவில்லை.
பொதுவாக நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி இருவருமே பல ஆண்டுகளாக தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் 2டி எண்டர்டெயின்மென்ட் அல்லது ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில்தான் அதிகமாக நடிக்கின்றனர். இதனால் பலத்த நஷ்டங்களையும் தொடர்ந்து சந்திக்கின்றனர்.
இப்போது கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டிருப்பதால் நடிகர் சூர்யா சம்பளம் எத்தனை கோடி ரூபாய் என்றாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். அதனால் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.





