மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் அதிகம் கவனம் பெறாத அவர் அடுத்து ரெமோ ரஜினி முருகன் பைரவா சர்கார் தொடரி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சிறந்த நடிப்பாற்றலும் அழகும் நடனத் திறமையும் கொண்ட கீர்த்தி சுரேஷ் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மகாநடி. தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கிய இந்த படம் தமிழில், நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. பழம்பெரும் நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படம்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சாவித்திரி தேவி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சீனியர் நடிகையான அவரது கேரக்டரில் இளம் வயது நடிகையான கீர்த்தி சுரேஷ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை, பாராட்டை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை தேசிய விருது கீர்த்தி சுரேஷூக்கு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் 1960, 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சாவித்திரி தேவி. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஒரு கட்டத்தில் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். சாவித்திரி தேவி நடிப்பை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
அவ்வளவு பெருமை வாய்ந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, மகாநடி படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் நாக் அஸ்வின் கூறியவுடன் நான் நடிக்க மறுத்துவிட்டேன். அதற்கு முக்கிய காரணம், சாவித்திரி அம்மாவின் கேரக்டரை என்னால் திரையில் சரியாக கொண்டு வர முடியுமா என்ற பயத்தில்தான் மறுத்துவிட்டேன்.
ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா, பிரியங்காவும் என் பதிலை கேட்டு அதிர்ந்து போய்விட்டனர். என்ன பொண்ணு இது, இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு தேடி வந்தும் வேண்டாம் என்கிறாரே என்று கூறினர். பிறகு என்னிடம் பேசி என் மனதை மாற்றி அந்த படத்தில் என்னை நடிக்க வைத்தனர், என்று அந்த நேர்காணலில் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.





