தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட். இப்போது பிளாஸ்ட் என்ற படத்தை ரூ. 12 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. நடிகர் அர்ஜூன் நடிகைகள் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பிளாஸ்ட் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.
வழக்கமாக 300 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் உருவான தமிழ் படங்கள் பலவும் பலத்த தோல்விகளை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் முன்னணி நட்சத்திர ஹீரோக்கள் நடித்த பல படங்கள் இப்படி பிளாப் ஆகியிருக்கின்றன.
அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் லால் சலாம் அண்ணாத்த போன்ற படங்கள் கமல் நடித்த தக்ஃலைப் விஜய் நடித்த குருவி சுறா ஆதி அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி சூர்யா நடித்த கங்குவா விஜய் சேதுபதி நடித்த ஏஸ் தனுஷ் நடித்த குபேரா என பல படங்களை சொல்லலாம்.
ஆனால் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் கோடிகளை குவித்து விடுகிறது. அந்த வரிசையில் லவ்டுடே டிராகன் குடும்பஸ்தன் குட்நைட் லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி பார்க்கிங் சிறை தாய்கிழவி போன்ற படங்களை சொல்லலாம். இந்த படங்களில் கண்டென்ட் இந்த படங்களை பெரிய அளவில் ஜெயிக்க வைத்திருக்கின்றன.
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவான பிளாஸ்ட் படம் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அபிராமி ப்ரீத்தி முகுந்தன் போன்றவர்களுக்கு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலும் அமோக வசூல் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்ட் படம் ஒரே வாரத்தில் 39 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்த வார இறுதிக்குள் எப்படியும் ரூ. 50 கோடி வசூலை தொட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜின் முதல் படமே இவ்வளவு பெரிய வசூலை குவித்திருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக பிளாஸ்ட் படம் ஜெயித்திருக்கிறது.





