வருகிற 2026ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கி விட்டது. 2 அரசியல் மாநில மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த தவெக தலைவர் விஜய் இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.
நாளை சனிக்கிழமை நாகை திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ளும் விஜய் வருகிற டிசம்பர் 20ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 2 அல்லது 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இதில் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் மட்டும் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் சனி ஞாயிறு என 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றன. அதே போல் அதிமுகவில் பாஜக கூட்டணி இருந்து வருகிறது. ஓபிஎஸ் அணி டிடிவி தினகரன் அணி சசிகலா அணி நாம் தமிழர் கட்சி தேமுதிக உள்ளிட்டவை திமுக அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து உள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி எந்த கட்சியில் சேரும் என்பது தெரிய வரும். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, இன்று செய்தியாளர்களை சந்தித்த போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதாவது இத்தனை காலமாக திமுக கூட்டணியில் இருந்த போது திமுக சாறு குடித்தது. நாங்கள் கரும்பு சக்கையாக இருந்து வேடிக்கை பார்த்தோம். இனியும் அப்படி சக்கையாக இருக்க மாட்டோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று வெளிப்படையாக பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் மட்டுமே தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் விஜயுடன் கை கோர்க்க விரும்புவது உறுதியாகி விட்டது. மேலும் டிடிவி தினகரன் ஓபிஎஸ் தேமுதிக என மற்ற கட்சிகளும் விஜய் அணிக்கு வர அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் தேர்தல் நேரத்தில் விஜய் கட்சி கூட்டணி பலம் நிறைந்த ஒரு கட்சியாக மாறும் சூழல் உருவாகி வருகிறது.





