தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என நட்சத்திர ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் கடந்த 1996 ஏப்ரல் 17ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் சந்தன கடத்தல் வீரப்பனை சந்தித்து எடுத்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது.
அதில் முன்னாள் பிரதமர் ஒருவரது மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தவறான தொடர்பு இருந்ததாக வீரப்பன் அந்த பேட்டியில் பேசியிருந்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது முற்றிலும் பொய்யான அவதூறான குற்றச்சாட்டு என நடிகை சுகன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது நற்பெயரை கெடுக்கும் விதமான இந்த பேட்டியால் தனது சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது, மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும் அதற்க்காக 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் இந்த வழக்கில் நடிகை சுகன்யா கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சிவில் நீதிமன்றம் 10,00,500 ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம், அதில் வீரப்பன் பேசிய கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதுபோன்ற பேட்டியை எடிட் செய்யும் முழு அதிகாரம் சன் டிவி நிர்வாகத்துக்கு இருக்கிறது என நக்கீரனுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருக்கிறது.
எடிட் செய்ய முழு அதிகாரம் வைத்து இருந்தும் அதை ஒளிபரப்பும் முன் விசாரிக்கவோ நடிகை சுகன்யாவிடம் இருந்து இதுபற்றி விளக்கம் கேட்கவோ இல்லை. அதனால் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல என சன் டிவி நிர்வாகம் இதில் தப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த அவதூறான பகுதியை மீண்டும் ஒளிபரப்ப நிரந்தர தடையும் தொடரும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.கடந்த 1996ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கில் 30 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு இப்போதுதான் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.





