நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி. இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்து விட்டார். வருகிற செப்டம்பர் 3ம் தேதி அல்லது தீபாவளிக்கு ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ரிலீஸ் தேதி உறுதியாக முடிவாகவில்லை. இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 173 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஓ மை கடவுளே டிராகன் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்த ஜெயச்சந்திரன் மற்றும் திருவேங்கடம் என்ற 2 டாக்டர்கள் 5 ரூபாய் கட்டணத்தில் சேவை செய்தவர்கள். அவர்களது வாழ்க்கை கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 173 படத்தில் பல பிரபலங்கள் ரஜினியுடன் இணைய உள்ளதாக ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன் ரஜினியுடன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களே வந்தாலும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் மீண்டும் இணைந்து திரையில் இந்த படத்தில் தோன்ற இருக்கின்றனர்.
அத்துடன் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்பட்ட ஷங்கர் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். அதுவும் ரஜினிக்கு வில்லனாக ஷங்கர்தான் நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் மகனாக மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கிறார். அவர் மலையாளத்தில் முன்னணி இயக்குனர் நடிகர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த மாத இறுதிக்குள் தலைவர் 173 படப்பிடிப்பை பாடல் காட்சியுடன் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. சாண்டி மாஸ்டர் தலைமையில் முதல் பாடல் ரஜினி நடிக்கும் காட்சியாக படமாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முன்னணி நட்சத்திர நடிகைகள் சிலர் நடிக்க உள்ளதாகவும் அவர்களிடம் படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டும் வருவதாக தெரிய வந்துள்ளது.





