ஒரு படத்தை வெற்றிப் படமாக கொடுப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் சாதாரணமான விஷயம் அல்ல. அதுவும் அந்த படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சாதாரண நடிகர்கள் நடித்த படமாக இருக்கும் பட்சத்தில் அது இயக்குனரின் அசாத்திய திறமையும் கதையும் திரைக்கதையும்தான் அந்த படத்தை அப்படி ஜெயிக்க வைக்கிறது.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் இயக்கிய முதல் படம் பார்க்கிங். கடந்த 2023ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் இந்திரஜா மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.
ஒரு காம்பவுண்ட் வீட்டில் கீழ் போர்ஷன் மேல் போர்ஷன் என இரண்டு குடித்தனங்கள் இருக்கின்றன. இதில் காம்பவுண்டுக்குள் உள்ள சின்ன இடத்தில் யார் தங்களது காரை நிறுத்திக் கொள்வது என்ற பார்க்கிங் பிரச்னை தான் இந்த படத்தின் மையக்கரு. இந்த கதைக்களத்தில் மிகவும் சுவாரசியமான படத்தை இயக்கியிருந்தார் புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. ஆனால் இந்த படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் கடந்த 2.5 ஆண்டுகளாக அடுத்த படத்தை இயக்க வாய்ப்பின்றி காத்திருக்கின்றனர். 3 ஹீரோக்கள் படங்களை இயக்க வாய்ப்பு அமைந்தும் பிறகு அது மிஸ் ஆகி விட்டது.
இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு படத்தை இயக்க 2024ம் ஆண்டில் ராம்குமார் பாலகிருஷ்ணன் கமிட் ஆனார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஸ் பாஸ்கரன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக அந்த படம் தயாரிக்காமல் நின்று போய்விட்டது. சிம்புவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போய்விட்டார். அடுத்து ரஜினி படத்தை இயக்க ராம்குமார் பாலகிருஷ்ணன் கதை சொன்ன நிலையில் ஓகே சொன்ன ரஜினி பிறகு நோ சொல்லி விட்டார்.
அதன்பிறகு சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதை ஓகே ஆன பிறகும் அவர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ஷனில் நடிக்காமல் சேயோன் படத்தில் நடிக்க போய்விட்டார். இப்படி 3 ஹீரோக்களுமே ஏமாற்றிய நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் அப்செட்டில் உள்ளார். சமீபத்தில் சிம்பு, அவரை அழைத்து பேசி ஆறுதல் சொன்னதாகவும் விரைவில் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புதல் தந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





