தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர் ராஜ்கிரண். ஆரம்பத்தில் காதர்மொய்தீன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். பிறகுதான் ராஜ்கிரண் என்ற பெயர் மாற்றம் செய்துக்கொண்டு நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என் ராசாவின் மனசிலே.
இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் தான் மீனா நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படம் நடிகர் வடிவேலுவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு மாணிக்கம் அரண்மனை கிளி எல்லாமே என் ராசாதான் பாசமுள்ள பாண்டியரே பொன்னு விளையற பூமி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அதன்பிறகு அப்பா கேரக்டரில் பல படங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக தவமாய் தவமிருந்து சண்டக்கோழி சண்டக்கோழி 2 ப பாண்டி வேங்கை இட்லி கடை முனி கொம்பன் பட்டத்து அரசன் கோவில் காவலன் ரஜினி முருகன் பாண்டவர் பூமி தொட்டால் பூ மலரும் என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
சமீபத்தில் நடிகர் ராஜ்கிரன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் சின்ன வயசுல ஏழ்மையில் இருந்து பசி பட்டினியில் வளர்ந்து வந்தவன். சென்னைக்கு வரும்போது எனக்கு 16 வயசு. சென்னைக்கு வருவதற்கு முன்னாடி வரைக்கும் எங்க அம்மா ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் என்னை ஒரு பணக்கார வீட்டு புள்ள மாதிரி வளர்த்துச்சு.
எனக்கு கஷ்டமே தெரியாமல் நான் ஒரு பணக்கார வீட்டு புள்ளை மாதிரியே ஊட்டி ஊட்டி வளர்த்தாங்க. 10வது வரைக்கும் படிக்க வெச்சிடுச்சு. சென்னைக்கு வேலை தேடி அலையும் போதுதான் தெரிஞ்சது நம்ம பணக்கார வீட்டு புள்ளை இல்லே. அம்மா எனக்கு கஷ்டம் தெரியாமல் வளர்த்து வெச்சிருக்குன்னு. இங்கே வந்தா கஷ்டம் நஷ்டம் பசி பட்டினியெல்லாம் பார்க்கும்போது வேதனையா போச்சு.
மனிதனுக்கு பசிக்கும்போது உணவளிக்கிறதை விட சிறந்த தர்மம் எதுவுமில்லை. அதனால் தான் நான் சொந்த படம் எடுக்கும் போது நான் என்ன சாப்பிடுகிறேனோ அதுதான் எல்லாருக்கும் பரிமாற வேண்டும் என்று நான் சொன்னேன் என்று நடிகர் ராஜ்கிரண் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர்கள் எம்ஜிஆர் விஜயகாந்த் போன்றவர்களும் படப்பிடிப்பு தளத்தில் இதே பார்மூலாவை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





