தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினி நடித்த லால் சலாம் மற்றும் உட்பட நூறுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தும் எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமையவில்லை.
ஆனால் அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான நான்கு படங்கள் தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், பிரமயுகம் உள்ளிட்ட மலையாள படங்கள் தொடர்ந்து வெற்றி மாலை சூடி வருகின்றன. தமிழ் படங்கள் வந்ததும் தெரியாமல், போவதும் தெரியாமல் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் 2004ம் ஆண்டில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டமாக கில்லி படத்தை ஆரவாரமாக வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் அப்படி ரசித்து கொண்டாடுகிறார்கள்.
படத்தின் அனைத்து பாடல்களுக்கும், எழுந்து நின்று இளம் வயது ஆண்கள், பெண்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாட்டம் போட்டு ஆடி பாடி மகிழ்கின்றனர். இன்றைய ஹிட் மலையாளப் படங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் வந்த விஜய் படம் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து குஷி படமும் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சம்மெல் பாய்ஸ் படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படம் உலகம் முழுவதும் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் இம்மாதம் 5ம் தேதி மஞ்சும்மெல் பாய்ஸ் படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று அனுமன் படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
அதன் பிறகு மே 3ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் ரிலீசாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பதிலாக மே 5ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நாளில் இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. முதலில் ஏப்ரல் 5, பிறகு மே 3, இப்போது மே 5ம் தேதி என ஓடிடி ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அறிவிப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.





