இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா திரிஷா உள்ளிட்டோர் நடித்த கருப்பு படம் கடந்த மே மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான 4 வாரங்களில் 340 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கும் இந்த படம் சூப்பர் கம்பேக் தந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கருப்பு படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் கருப்பு படம் வெளியான போது இந்த படம் அதிகமாக விமர்சனங்களில் சிக்கவில்லை. வழக்கமாக சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவின் படங்கள் ட்ரோலில் சிக்குவது வழக்கமாக நடக்கும். ஆனால் இந்த முறை கருப்பு படம் தப்பித்து விட்டது. நெட்டிசன்கள் பலரும் அரசியல் பதிவுகளில் பிஸியாக இருந்ததாலும் பக்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படமாக இருந்ததாகவும் கருப்பு படத்தை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தேர்தல் சமயத்தில் தன்னை தவெக தலைவர் விஜய் ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டார். கருப்பு படத்தை காப்பாற்றவே அவர் இப்படி செய்ததாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. கருப்பு படம் வெளியான பின்பு முதல்வர் விஜயை இயக்குனர் பாலாஜி நேரிலும் சந்தித்தார். மேலும் கருப்பு படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது. பிறகு சூர்யாவுக்காக மாற்றி எழுதப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கருப்பு படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது வசமாக ரசிகர்கள் மத்தியில் ட்ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. குறிப்பாக சிங்கம் சூர்யா கெட்டப்பில் கிளைமாக்ஸ்க்கு முன்பாக சண்டைக்காட்சிகளில் வருகிறார். அந்த காட்சியில் சிங்கம் சூர்யாவின் தலையை மட்டும் வெட்டி எடுத்து ஒட்டி இருப்பதை எளிதாக பார்க்க முடிகிறது.
அந்த சண்டைக் காட்சியில் யாரோ ஒரு டூப் நடிகரை வைத்து எடுத்துவிட்டு அதில் அவருக்கு பதிலாக நடிகர் சூர்யாவின் தலையை ஒட்ட வைத்து ஒட்டு வேலை பார்த்துள்ளனர். அதில் அந்த டூப் நடிகரும் தெளிவாக தெரிகிறார். தியேட்டரில் படம் பார்க்கும்போது அந்த காட்சி பரபரப்பானதாக இருந்ததால் ரசிகர்கள் இதை தெளிவாக கவனிக்க முடியவில்லை. ஆனால் ஓடிடியில் இந்த படத்தை அந்த காட்சியை கவனித்து பார்க்கும்போது அதில் இந்த ஒட்டு வேலையை ஆர்ஜே பாலாஜி செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.
அந்த அளவுக்கு கிராபிக்ஸை இவ்வளவு மோசமாக செய்துள்ளதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜியை ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள். படத்தின் பட்ஜெட் அதிகமானதால் குறைந்த செலவில் இப்படி ஒரு மொக்கையான ஒட்டு வேலையை பார்த்திருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் இயக்குனரை விமர்சித்து வருகின்றனர்.





