ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் தற்போது வரை உலகளவில் சுமார் ரூ.500 கோடிகள் வரை வசூல் ஆகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “தர்பார்”, “அண்ணாத்த” ஆகிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

ஆதலால் “ஜெயிலர்” திரைப்படம் ரஜினியின் கெரியரில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படமாக ஆகியுள்ளது. அதே போல் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அந்த சமயத்தில் நெல்சன் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டார்.
மீண்டும் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த நெல்சன், “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் அதனை வென்று காட்டினார். “ஜெயிலர்” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால் ஒவ்வொரு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களாக திகழும் உச்ச நட்சத்திரங்களை நடிக்க வைத்தார் நெல்சன்.

மலையாளத்தில் இருந்து மோகன் லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து சுனில், ஹிந்தியில் இருந்து ஜாக்கி செராஃப் ஆகியோர் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் அனைத்துமே சிறு சிறு கதாபாத்திரங்கள்தான்.
குறிப்பாக மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதே போல் இத்திரைப்படத்தில் தமன்னா, சரவணன், ஆகியோரின் கதாபாத்திரங்கள் சின்ன கதாபாத்திரங்களாகவே இருந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சரவணன், “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசியிருந்தார். அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானதுமே, சரவணன் நெல்சனுக்கு “நான் தலைவர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரமாவது நடிக்க வேண்டும். போஸ்ட் மேன் கதாபாத்திரமாக இருந்தால் கூட பரவாயில்லை. நான் அவருடைய தீவிர ரசிகன். நான் இதுவரை யாரிடமும் நானாக சென்று வாய்ப்பு கேட்டதில்லை. தலைவர் படம் என்பதால் உங்களிடம் வாய்ப்பு கேட்கிறேன்.

போன முறை டாக்டர் படத்திற்கும் என்னை அழைக்கவில்லை, பீஸ்ட் படத்திற்கும் என்னை அழைக்கவில்லை. ஆதலால் தலைவர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்” என மெசேஜ் அனுப்பினாராம். அதற்கு நெல்சன் ஒரு தம்ப்ஸ் அப் ஸ்டிக்கர் அனுப்பினாராம்.
அதன் பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் சரவணன், ஒரு மெசேஜ் அனுப்ப, அதற்கு நெல்சன், “நீங்கள் நிச்சயம் படத்தில் இருக்கிறீர்கள்” என்று கூறினாராம். இவ்வாறுதான் சரவணன் “ஜெயிலர்” படத்தில் நடித்திருக்கிறார்.





