விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கி 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் 7 ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் 10வது சீசன் பிக்பாஸ் துவங்க உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் 10வது சீசனில் பிக்பாஸ் தி காமன்மேன் என்ற பெயரில் முன்கூட்டியே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன் பிரமோ வீடியோ கடந்த வாரம் வெளியானது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் சாதாரண நபர்களும் கலந்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை தருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்பும் யார் வேண்டுமானாலும் தங்களைப் பற்றி விபரத்தை அனுப்ப வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விரும்புவதற்கான காரணத்தை 2 நிமிட வீடியோவாக முழு விபரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். அதில் தேர்வாகும் நபர்கள் பிக்பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சினிமா டிவி பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண நபர்களும் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துள்ளனர்.
முதல் சீசனில் டைட்டில் வின்னர் பட்டம் வென்ற ஆரவ் கூட பெரிய அளவில் அப்போது பிரபலமாகாதவர்தான். ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் போட்டியாளர்களாக சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இதனால் ஆடியன்ஸ் மத்தியில் சலிப்பும் ஏற்பட்டது. அதுவும் டிவி நட்சத்திரங்களாக விஜய் டிவியில் சீரியலில் நடித்தவர்கள் அதிகமாக வந்ததும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பிரபலமான சிலரையும் பிக்பாஸ் போட்டியாளராக களத்தில் இறக்கியது விஜய் டிவி. ஆனால் அதுவும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் பல பிரபலங்கள் இதற்காக பிரிப்பேர் ஆகி வந்ததும் வெளியே சோஷியல் மீடியால் ஒரு டீம் வைத்து தங்களை பிரபலப்படுத்தி அதிக ஓட்டுகளை பெறுவதாகவும் சர்ச்சையும் எழுந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கமர்சியலாக பெரிய ஹிட் தரும் பிக்பாஸ் ஷோவுக்கு காரணமாக இருப்பது ஆடியன்ஸ்தான். எனவே பொதுமக்கள் தரப்பிலிருந்து சாதாரண பார்வையாளர்களை இந்த களத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாக உண்மையாக இருக்கும் என்று இந்த முறை பொதுமக்களில் பலரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





