இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். கமர்ஷியல் படங்களாக அவர் இயக்கினாலும், ரசிகர்களை கவரும் விதமாக கதைக்களங்களில் அந்த படங்களை உருவாக்குகிறார். ஹீரோயிசம் மட்டுமே பேசும் கமர்ஷியல் படங்களாக இல்லாமல் சமூக கருத்துகளை சொல்லும் படங்களாகவும் இருக்கின்றன.
அந்த வகையில் ரஜினி நடித்த சிவாஜி எந்திரன் 2.0 என 3 படங்களை ஷங்கர் இயக்கி உள்ளார். கமல் நடித்த இந்தியன் இந்தியன் 2 என 2 படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் நண்பன் விக்ரம் நடிப்பில் அந்நியன் ஐ அர்ஜூன் நடிப்பில் ஜெண்டில்மேன் முதல்வன் பிரசாந்த் நடிப்பில் ஜீன்ஸ் என ஷங்கர் இயக்கிய பல படங்கள் மாபெரும் ஹிட் படங்கள்தான்.
ஆனால் கடைசியாக வந்த இந்தியன் 2 மட்டுமே, பிளாப் படமாகி விட்டது. அதே போல் டீன் ஏஜ் வயதினரை மட்டுமே பாய்ஸ் படம் கவர்ந்தது. மற்றபடி ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இப்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிறது.
வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகிறது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ராம் சரணுடன் இந்தி நடிகை கியாரா அத்வானி நடிகர் எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தமன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்துக்கான பிரமோசன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாளை 7ம் தேதி சென்னையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொள்கிறார். அதே நேரத்தில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் பேசுகையில், நல்ல பொருத்தமான கதை அமைந்தால், நடிகர் ரஜினியுடன் மீண்டும் படம் பண்ண தயாராக இருக்கிறேன், என்று உறுதியாக கூறியிருக்கிறார். ஏற்கனவே சிவாஜி எந்திரன் 2.0 என ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவான படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. கேம் சேஞ்சர் இந்தியன் 3 படங்களுக்கு பிறகு வேள்பாரி படத்தை இயக்கும் ஷங்கர், அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





