தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்தவர் ராகவா லாரன்ஸ். பிறகு பிரபுதேவா நடனக் குழுவில் ரஜினிகாந்த் சிபாரிசின் மூலம் சேர்ந்து குழுவில் நடனமாடினார். பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறி பல படங்களில் பணிசெய்து முன்னிலைக்கு வந்தார்.
அமர்க்களம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றிய ராகவா லாரன்ஸ் பிறகு ஹீரோவாக மாறி முன்னேறிய நிலையில் இன்று ஒரு நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் உள்ளார். நடிகர் நடன இயக்குனர் தயாரிப்பாளர் இயக்குனர் என பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் கலைஞராக உள்ளார். ஏழை எளிய மக்களுக்கு கஷ்டப்படும் நிறைய பேருக்கு உதவிகளும் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெருநாய்களுடன் பொதுமக்களை ஒப்பிட்டு பேசி கடும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். ஆரம்பமே கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார். பொதுவாகவே அம்மாவை பெருமிதமாக எப்போதுமே பேசி வரும் ராகவா லாரன்ஸ்சை ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து தனது எக்ஸ் பதிவில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, விஜய் தோற்று இருந்தால் இவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். இப்போது விஜய் ஜெயித்த பிறகு தானும் முதல்வர் ஆகிவிடலாம். தமிழக மக்கள் சினிமாக்காரர்களை எளிதில் சிஎம் ஆக்கி விடுவார்கள் என நம்புகிறார்.
அடிக்கடி அம்மா சென்டிமென்ட் பேசி அனுதாபம் தேடும் ஆண்களை நம்பவே கூடாது. மொத்த தமிழ்நாட்டு மக்களும் வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் அரசியலுக்கு வரப்போவது உறுதி. இதெல்லாம் அரதப்பழசான டெக்னிக். புதுசா யோசிங்க. இல்லைனா காஞ்சனா 5 6 7ன்னு எடுத்துட்டே போங்க என்று ப்ளு சட்டை மாறன் ராகவா லாரன்ஸ் குறித்து அவரது ஸ்டைலில் விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும்தான் தாய்ப்பாசம் உள்ளவரா? எதற்கெடுத்தாலும் அம்மா சென்டிமென்டை கேடயமாக்கி அனுதாபம் தேடி அறுக்க வேண்டாம். ஓவர் புல்லரிப்பு உடம்புக்கு ஆகாது. புதுசா ட்ரை பண்ணுங்க என்றும் ப்ளு சட்டை மாறன் அதில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





