தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். சில படங்களில் அவரே கதாநாயகனாகவும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மிகவும் நேர்த்தியான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பிரகாஷ்ராஜ். எந்த கேரக்டர் என்றாலும் அதனை வெகு இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றவர். அரசியல் களத்திலும் அவர் உள்ளார். கர்நாடகாவில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவ்வப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். மேலும் சில நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தனது கருத்தை சமூக வலைதளங்களில் முன்வைத்தும் வருகிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்த யூடியூபர்கள் அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது, ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை விமர்சித்த யூடியூபர்களுக்கு ஜாமீன் வழங்கியும் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்வது அதிகார துஷ்பிரயோகம். 30 வழக்குகள் வரை அவர்கள் மீது தயார் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வெட்கக்கேடானது.
மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களை விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நான்கு மாநிலங்களில் அவர் நான்கு விதமான வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





