தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலை கழகம் என்று சொல்லப்படும் நடிகர் திலகத்துக்கு செவாலியே தாதா சாகிப் பால்கே போன்ற மிக உயர்ந்த விருதுகளை வழங்கி அவரது கலைத்துறை சேவைக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது. நடிப்புக்கே இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதும் நடிகர் கமல்ஹாசன் தனது குருநாதர்களாக சொல்வது இயக்குனர் கே பாலசந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரை தான். அதே போல் காமெடி நடிப்பில் தனது முன்னோடியாக நடிகர் நாகேஷ் பெயரை சொல்லி அவரையும் நடிகர் கமல் அடிக்கடி கௌரவப்படுத்தி வருகிறார். இன்றைய தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நாயகன் கமலுக்கு நடிப்பில் குருநாதர் என்றும் சிவாஜி கணேசன்தான்.
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனராக உள்ளார். 30 ஆண்டுகளில் 15 படங்களை மட்டுமே அவர் இயக்கி உள்ளார். எனினும் அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் 10 படத்துக்கு சமம் என்பது போலவே இருந்திருக்கிறது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் மட்டுமே படுதோல்வியை சந்தித்து விட்டன.
எனினும் அவர் இயக்கிய முதல்வன் அந்நியன் இந்தியன் நண்பன் பாய்ஸ் ஜீன்ஸ் ஜெண்டில் மேன் காதலன் சிவாஜி எந்திரன் 2.0 பாய்ஸ் போன்ற படங்கள் இன்றும் ஷங்கர் இயக்கத்தின் மேன்மையை சொல்லும் முக்கிய படங்களாக இருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் அடுத்து வரும் இந்தியன் 3 படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, என் அம்மா கர்ப்பமாக இருந்த போது, நான் அவரது வயிற்றில் இருந்த போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். டெலிவரி டைம் அது. இன்னும் ஓரிரு தினங்களில் டெலிவரி ஆகிவிடும் சூழலில் என் அம்மா படம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
அது சிவாஜி கணேசன் சார் நடித்த படம். அதில் சிவாஜி நடித்த கேரக்டர் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதில் சிவாஜியின் கேரக்டர் பெயர் ஷங்கர். அதனால் பையன் பிறந்தால் ஷங்கர் என பெயர் வைக்க நினைத்துள்ளார். படம் பார்த்துட்டு இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டு, அடுத்தநாள் நான் பிறந்திருக்கிறேன். சிவாஜி நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் அம்மா எனக்கு ஷங்கர் என்றே பெயர் வைத்துவிட்டார், என இயக்குனர் ஷங்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





