இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்த போது அவரது இறுதி சடங்குகளில் ஒரு முக்கிய நபராக இருந்து எல்லா விஷயங்களையும் முன் நின்று நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கவனித்துக்கொண்டார். ஒரு குருநாதருக்கு தனது கடமையை செய்யும் சிஷ்யராக அந்த பொறுப்புகளை பார்த்திபன் மேற்கொண்டது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, நான் பாக்யராஜிடம் உதவியாளராக சேர்வதற்கு முன்பு டப்பிங் பேசுவது டிவி நாடகங்களில் நடிப்பது என பல வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் மீது என்னுடைய தந்தைக்கு மிகவும் கவலையாக இருந்தது.
என் அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில்தான் நான் பாக்யராஜிடம் போய் சேர்ந்தேன். அவரிடம் வேலைக்கு சேர்ந்தாலும் தாவணிக் கனவுகள் படத்தில் நான் 11வது உதவி இயக்குனராக தான் சேர்ந்தேன். நான் சீக்கிரமாக ஹீரோவாகவோ இயக்குனராகவோ ஆகிவிட வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் அந்தப் படத்தில் போஸ்ட்மேன் கேரக்டர் ஒன்றில் பாக்யராஜ் என்னை நடிக்க வைத்தார்.
என்னுடைய தந்தையின் புற்றுநோய் பாதிப்பு பற்றியோ நான் அனுபவித்து வந்த குடும்ப கஷ்டங்கள் குறித்தோ அவரிடம் நான் எதையும் சொல்லவில்லை. அப்போது எனக்கு கிடைத்த சம்பளம் வெறும் 300 ரூபாய் மட்டும்தான். அதில் 270 ரூபாய் அப்பாவின் மருந்து மாத்திரைகளுக்கே செலவாகி விடும். மீதமுள்ள 30 ரூபாயை வைத்துக்கொண்டு நானும் என் அம்மா அப்பா தம்பி என நான்கு பேரும் 30 நாட்களும் சாப்பிட வேண்டும்.
முன்னேற வேண்டும் என்ற மனநிலையுடன் இரவும் பகலும் அழுது கொண்டே உழைப்பேன். பார்த்திபன் இப்படி உடைந்து அழுது யாரும் பார்த்ததில்லை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். யாரும் பார்க்கவில்லை என்பதை தவிர நான் பல நாட்கள் தனிமையில் உடைந்து அழுது இருக்கிறேன். நான் மிகவும் சென்சிடிவ் ஆன ஒருவன் தான். என் நிலைமையை புரிந்து கொண்டு பாக்யராஜ் சார் எனக்கு அந்த போஸ்ட்மேன் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அளித்தார்.
என் தந்தையும் அதை பார்த்தார். நிறைய பத்திரிகைகளில் என்னை பாராட்டி விமர்சனங்கள் வந்தன. அதைப் பார்த்து என் தந்தை அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இறக்கும் தருவாயில் இருந்த அவருக்கு அந்த நிம்மதியை தந்த என் இயக்குனருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். ஒரு நாள் என் தந்தையை அவரிடம் அழைத்துச் சென்று நன்றி கூறினோம். என் மகனை உங்களிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்கிற எண்ணம் என் அப்பாவிடம் அப்போது இருந்தது என்று இயக்குனர் பார்த்திபன் நெகிழ்ச்சியாக தனது குருநாதர் கே பாக்யராஜ் குறித்து பேசியிருக்கிறார்.





