நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். மாயாண்டி குடும்பத்தார் எல்ஐகே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி சீமான் போன்ற படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் சீமான் உதவி இயக்குனராக பணிசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிதாக பான் இந்தியா படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் முருகப்பெருமானை மையமாக வைத்து கதைக்கரு உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் அறிவிப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி வெளியிட்ட ஒரு பதிவில், முருகப்பெருமான் வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் கடவுளான முருகனை வடநாட்டில் பிறந்தவர் என நாகவம்சி கூறிய நிலையில் முருகப்பெருமான் வடக்கே பிறந்தவர் எனக் கூறும் ஜூனியர் என்டிஆர் படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, வணிகத்துக்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ் பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
வடபுலத்தில் முருகப் பெருமான் பிறந்தார் என்பது போன்ற கட்டுக் கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்து திணிக்க முயல்வதை படக்குழு உடனடியாக கைவிட வேண்டும்.இல்லை என்றால் மிக கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இந்த படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ் திரையரங்கு உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எந்த ஒரு திரையரங்கமும் இந்த படத்தை திரையிட விடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்.
அப்படிப்பட்ட நிலைக்கு எங்களை தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியான நம்புகிறேன். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இந்த படம் வெளிவந்தால் கடும் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பையோ தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்க கூடாது என்றும் அந்த பதிவில் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.





