மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. தமிழில் நடிகர் ஸ்ரீகாந்துடன் பூ மற்றும் நடிகர் சியான் விக்ரமுடன் தங்கலான் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அழுத்தமான சிறந்த நடிப்பை பார்வதி வெளிப்படுத்தி வருகிறார்.
அதே போல் மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படையாக பேசக்கூடியவர் பார்வதி. அதனாலேயே அவர் பல சமயங்களில் பலவிதமான சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கியுள்ளார். குறிப்பாக மலையாள சினிமாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு சினிமா பெண்கள் நல அமைப்பின் மூலமாக எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகை பார்வதி.
இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக மலையாள சினிமாவில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும் அது குறித்து நடிகை பார்வதியின் கருத்து வேறாக உள்ளது. இன்னும் ஹீரோக்களின் துதிபாடும் பழக்கம் மலையாள சினிமாவில் இருந்து மாறவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பார்வதி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, கடந்த எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளில் மலையாள சினிமாவில் ஓரளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவை உண்மையான அக்கறையால் வரவில்லை. மாறாக பொதுமக்களில் கண்டனம் மீடியா விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு பயந்துதான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இன்னும் ஹீரோ வழிபாடுதான் மலையாள சினிமாவில் நிலவுகிறது. சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கடவுளாக பார்க்கப்படுவதால் அவர்களை யாரும் கேள்வி கேட்க முன்வருவதில்லை. அவர்களை யாரும் கேள்வி கேட்க முடிவதும் இல்லை. இது புதுமுகங்கள் மீது அதிகாரம் மிக்க நபர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த வழிவகுக்கிறது.
இந்த சீர்திருத்தங்களின் வேகம் குறைவாக இருப்பது ஏமாற்றம் அளித்தாலும் கூட எங்களது பெண்கள் நல அமைப்பு இதற்கான போராட்டத்தில் இருந்து சிறிதும் பின்வாங்க போவதில்லை. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து எங்களது போராட்டம் தொடரும் என்று நடிகை பார்வதி அந்த நேர்காணலில் உறுதியாக பேசியிருக்கிறார்.





