தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் ரவி மோகன். ஜெயம் படம் துவங்கி அவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் தனி ஒருவன் போகன் வனமகன் பேராண்மை எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ரவி மோகன் இருந்து வருகிறார். மேலும் நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தையும் நடிகர் ரவி மோகன் இயக்கி வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவர் சமீபத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த போதிலும் இப்போது அதில் இருந்து மீண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரவி மோகன் கூறியதாவது, ஒரு மனிதன் அவன் மேல் காட்டும் அன்பும் அக்கறையும் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது என்று நினைப்பவன் நான். எப்போது நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறோமோ அப்போதும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாம் நன்றாக பார்த்துக் கொள்ள தொடங்குவோம்.
நான் மகிழ்ச்சியாக இருந்தால் என்னுடன் இருப்பவர்களையும் என்னால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவும் மக்கள் என் மேல் காட்டும் அன்பு பரிசுகளுக்கும் மேலானது. அவர்களின் அன்பால் தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் நடித்த அனைத்து படங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் ஜெயம் தான்.
இன்னும் எவ்வளவு படங்கள் நான் நடித்தாலும் ஜெயம் படத்தால் தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என் வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுத்தால் என் வாழ்க்கையில் நடந்த நாடகங்களே பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறும். நிம்மதி மற்றும் வெற்றி என்பதன் இடையில் நான் எப்போதும் நிம்மதியை தேர்ந்தெடுப்பேன். வெற்றி என்று நான் கருதுவது மக்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பை தான்.
கூடவே புகழ் மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில் நான் சந்தேகம் இல்லாமல் மகிழ்ச்சியை தான் தேர்வு செய்வேன். நான் நடிகன் தயாரிப்பாளர் என்பதை தாண்டி மக்களுக்கு என்னைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அன்பு பாசம் கருணை மிகுந்தவன் என்பேன் என்று நடிகர் ரவி மோகன் கூறியிருக்கிறார். ரவிமோகன் நடிப்பில் அடுத்து கராத்தே பாபு என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.





