தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் யோகிபாபு. இயக்குனர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் யோகி என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதுவரை லொள்ளு சபா பாபு என்று அழைக்கப்பட்ட அவர் யோகி படத்தில் நடித்த பிறகுதான் யோகி பாபு என்று அழைக்கப்பட்டார்.
யோகி படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. அன்று முதல் பாபு யோகி பாபு ஆகி விட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்து பிஸியான ஒரு காமெடி நடிகராக அவர் மாறினார். இந்தியில் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.
இப்போது யோகிபாபு நடித்த 300வது படம் அர்ஜூனன் பேர் பத்து வருகிற 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வாகனத் திருட்டு மோசடி பாதிக்கப்படும் சாதாரண மக்கள் என்ற கதைக்களத்தில் உருவான இந்த படத்தை ராஜ்மோகன் டைரக்ட் செய்து இருக்கிறார். சென்னையில் அர்ஜூனன் பேர் பத்து படத்தின் படப்பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் யோகி பாபு பங்கேற்றார்.
அப்போது நடிகர் யோகி பாபு பேசியதாவது, நான் எப்போதும் காமெடியன் தான். என்னுடன் யார் நடித்தாலும் அந்த இடத்தில் என்னால் என்ன காமெடி பண்ண முடியும் என்று யோசிப்பேன். நயன்தாரா தொடங்கி பல ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். இன்னமும் நடிகர் கமல்ஹாசன் உடன் நடிக்கவில்லை.
என் வளர்ச்சிக்கு கடவுள் அருள் முக்கியம். நான் வணங்கும் முருகன் என்னை இந்த நிலையில் வைத்துள்ளார். அவர் அருளால் 3000 படங்களில் கூட நடிக்கலாம். கதாநாயகனாக பல படங்களில் நடித்தாலும் நான் காமெடியன் தான். இத்தனை காலம் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. இப்போதும் பல படங்களில் நான் பிஸியாக நடித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதையை இயக்குனர் என்னிடம் சொன்னார். பின்னர் அவரை காணவில்லை.
ஒருநாள் ஆபீசில் இருந்து யோசித்தபோது அவருக்கு போன் போட்டேன். கார் டிரைவராக இருப்பதாகச் சொன்னார். அவரை அழைத்து மீண்டும் கதையை சரி செய்து இந்த படத்தில் நடித்தேன். பல உதவி இயக்குனர்களை இயக்குனராக்க தயாராக இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று நடிகர் யோகி பாபு பேசினார்.





