தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். குறிப்பாக அவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அற்புதமாக இருக்கும். மேலும் விஜயகாந்த் நடித்த குடும்ப படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
கடந்த 1997ம் ஆண்டில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த படம் தர்மசக்கரம். இந்த படத்தில் ரம்பா கதாநாயகியாக நடித்திருந்தார். படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் விஜயகாந்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, விஜயகாந்த் ரொம்பவும் தங்கமான டைப். ரொம்பவும் பிரண்ட்லியான நண்பராக இருந்தார். பார்க்கிறதுக்கு தான் முரட்டுத்தனமாக தெரிவார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கூட அவரை முரட்டுத்தனமா நான் பார்த்தது இல்லை.
ஆனால் எந்த ஊரில் ஷூட்டிங் நடந்தாலும் ஈவ்னிக் 2 மணி நேரத்துக்கு மேலாக ரசிகர்களுக்கு அவர் நேரத்தை ஒதுக்கிடுவார். அவர் தங்கி இருக்கிற ஓட்டல்ல வந்து ஓட்டல் முன்னாடி அந்த ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் வந்து வரிசையில் நிற்பாங்க. ஒவ்வொரு ரசிகருக்கும் தனியா ஸ்டில் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் இதுக்கு ஒதுக்கிடுவார்.
இதற்காக தனியா ஒரு ஸ்டில் போட்டோகிராபரும் இருப்பார். அப்படி தினமும் 2 மணி நேரம் தன்னோட ரசிகர்களுடன் போட்டோ எடுக்கறதுக்கே அவர் நேரத்தை ஒதுக்கி தந்துடுவார். அதுதான் பின்னாடி அவர் அரசியலுக்கு வர்றதுக்கு ஒரு ஊன்றுகோல் மாதிரி ஸ்ட்ராங்க் ஆன பேஸ்மென்ட் ஆக இருந்தது.
விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் மாதிரி பி மற்றும் சி சென்டர்களில் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லுவாங்க. ஆனால் ஏ சென்டர்களிலும் விஜயகாந்துக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாங்க. குறிப்பாக சிட்டியில் பெண் ரசிகைகள் அதிகம். பெண்களை காப்பாற்றுவது பெண்களை பாதுகாப்பது போன்ற காட்சிகளில் நடித்து பெண்களின் மனங்களை கவர்ந்தவர் என்று என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





