தமிழ் சினிமாவில் நக்கல் கலந்த நடிப்பை வெளிப்படுத்தும் வில்லன்களுக்கும், குணச்சித்திர நடிகர்களுக்கும் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வரிசையில் தற்போதைய இளைஞர்களின் பேவரைட் என்றால் நடிகர் மாரிமுத்து. இயக்குநராக திரைப்பயணத்தை தொடங்கிய இவர், கடந்த சில ஆண்டுகளாக நடிகராக அசத்திவருகிறார். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவை, மதுரை ஸ்லாங்கில் பிறரை கேலி செய்யும் பேச்சுக்காகவும் பெண்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த சீரியலில் மாரிமுத்து பேசும் வசனங்களை வைத்து பலர் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மாரிமுத்து சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் உடன் வரும் மாரிமுத்து, படத்தின் பிற்பாதி முழுவதும் ரஜினியுடன் இருக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்தின் பேட்டியில் பங்கேற்ற மாரிமுத்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.
அந்தப் பேட்டியில் அவர், ‘சென்னையில் நான் பேச்சிலர்கள் அறையில் 4 பேருடன் தங்கியிருந்தேன். எனக்கு திருமணம் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடப்பதாக இருந்தது. நீங்கள் வரவில்லையென்றால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என வைரமுத்துவிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன்.
எனது திருமண நாளான செப்.2, 1994 அன்று அதே நாளில் பாட்ஷா படத்தின் முதல் பாடல் ரெக்கார்டிங் இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டூடியோவில் இருந்தது. எப்போதும் ரஜினி படத்தின் முதல் பாடல்களுக்கு வைரமுத்து செல்வது வழக்கம். ஆனால் எனது திருமணத்திற்காக வைரமுத்து, அந்த ரெக்கார்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டார்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் திருமணத்திற்கு முன் பேச்சிலர் அறையில் இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிவிட்டேன். புதிதாக திருமணமான கணவன், மனைவிக்கு தேவையான அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிட்டே திருமணம் செய்ய ஊருக்குச் சென்றேன். திருமணம் முடிந்து வந்தபோது இதைப் பார்த்த என் மனைவி மிரண்டுவிட்டார்.
எங்கள் திருமணத்திற்கு வைரமுத்து வந்ததால், அவரை பார்க்க அதிகம் கூட்டம் வந்துவிட்டது. அவர்கள் திருமண உணவை சாப்பிட்டு சென்றனர். அதனால் மணமக்களான எங்களுக்கே சாப்பாடு இல்லாமல் போனது. பின்னர் நாங்கள் ஹோட்டலில் சென்றுதான் சாப்பிட்டோம். தற்போது நடைபெறும் திருமணங்களில் சாப்பாட்டு முறை சீரற்ற நிலையில் உள்ளது. 70 வகை உணவுகளை வைக்கும் திருமண வீட்டார், அதை அனைவரும் விரும்பி சாப்பிட்டார்களா என்பதை கவனிப்பதில்லை. பிரம்மாண்டமும் பந்தாவும் இருக்கிறதே தவிர, உணவில் ருசியில்லை என்றார்.





