தமிழ் சினிமா இயக்குனர்களில் கவனிக்கப்படும் இளம் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்த லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் குறும்படங்களை மட்டுமே இயக்கியவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணிசெய்யாமல் நேரடியாக களத்தில் இயக்குனராக இறங்கி வெற்றி பெற்றவர். மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கினார். கதாநாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல், இரவிலேயே படமாக்கப்பட்ட இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து விக்ரம், மாஸ்டர், லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குனராக மாறினார். ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது இமேஜ் இருந்து வருகிறது. இதில் லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது.
இப்போது லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நித்யாராம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, கமல் நடவடிக்கைகள் குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரை பொறுத்தவரை அவர் இயக்குனர்களின் நடிகர். அவர் படத்தில் நடிக்கும் சக நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனித்துக் கொண்டு பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர்.
ஆனால் கமல் சார் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒருவர். அவர் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் என்பதை அவரே கூறுவார். ஆனால் இருவருமே கேமராவுக்கு முன்பு நிற்கும் போது நடிகர் என்பதை மறந்து, அந்த கேரக்டர்களாகவே மாறிவிடுவார்கள் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





