நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படத்தை அடுத்து வெளிவர உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமீதா பைஜூ ரவீனா தாண்டன் ராதிகா சரத்குமார் சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 14ம் தேதி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோவையில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது, கோயம்புத்தூர் என்னுடைய சொந்த ஊர்.
எனது உறவுகள் சொந்தங்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். சில காரணங்களால் எனது பிறந்தநாளை கொண்டாட விட்டாலும் ஐந்தாயிரம் பேர் இரத்த தானம் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு தேடித்தேடி சென்று பாட புத்தகங்கள் வழங்கி இருக்கிறார்கள். விடுமுறை காலங்களில் 12ம் வகுப்பு படிக்கும் வரை விடுமுறை நாட்களை சூலூரில்தான் கழிப்பேன். நிலத்தில் உழுது ஆடு மாடு மேய்த்து கிணற்றில் குளித்த காலங்கள் இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் பார்க்கும்போது உதட்டோரம் ஒரு சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஹீரோவுக்கான விஷயங்களும் இருக்கும். காமெடியும் தனியாக இருக்கும். இது ரசிகர்களுக்கான படம். ரசிகர்களின் குடும்பங்களுக்கான படம். எனக்கு வெற்றி கொடுத்த ரசிகர்களுக்கு இதைவிட பல மடங்கு வெற்றி கிடைக்க வேண்டும்.
காதல் என்பது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் காதலிக்க வேண்டும். 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தாலும் அந்த அன்பும் காதலும் தொடர வேண்டும். வாழ்க்கையில் காலம் மாறலாம். முன்னுரிமைகள் மாறலாம். மனிதர்களும் மாறலாம். ஆனால் நம் துணை மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் ஒருபோதும் மாறக்கூடாது. ஒரு பெண் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதற்காக கடந்து வரும் பாதை ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது.
ஒரு வீட்டை கவனித்துக் கொள்வதிலும் குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதிலும் பெண்கள் எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். அந்த தியாகங்களுக்கு எப்போதுமே மதிப்பளிக்க வேண்டும். உங்கள் துணைக்கு எப்போதும் மரியாதையும் அன்பும் குறைய கூடாது. உண்மையில் காதலை விட மரியாதையை அதிகமாக அவர்களுக்கு காட்டுங்கள். அந்த மரியாதையை வாழ்க்கை முழுவதும் உறுதியாக கடைப்பிடியுங்கள் என்று நடிகர் சூர்யா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





